2. ஞானகுரு தரிசனம் |
2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. |
1 |
2657
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே. |
2 |
2658
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. |
3 |
2659
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. |
4 |
2660
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. |
5 |
2661
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. |
6 |
2662
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. |
7 |
2663
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. |
8 |
2664
தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. |
9 |
2665
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. |
10 |
2666
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே. |
11 |
2667
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. |
12 |
2668
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை
விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. |
13 |
2669
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. |
14 |
2670
வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. |
15 |
2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. |
16 |
2672
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே. |
17 |
2673
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. |
18 |
2674
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. |
19 |
4. ஒளி |
2681
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே. |
1 |
2682
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. |
2 |
2683
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே. |
3 |
2684
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. |
4 |
2685
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. |
5 |
2686
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி
துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. |
6 |
2687
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. |
7 |
2688
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே. |
8 |
2689
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. |
9 |
2690
உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. |
10 |
2691
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. |
11 |
2692
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. |
12 |
2693
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. |
13 |
2694
சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. |
14 |
2695
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. |
15 |
2696
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. |
16 |
2697
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே. |
17 |
8.1 திருக்கூத்து தரிசனம் |
2722
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. |
1 |
2723
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. |
2 |
8.2 சிவானந்தக் கூத்து |
2724
தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. |
3 |
2725
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. |
4 |
2726
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. |
5 |
2727
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே. |
6 |
2728
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. |
7 |
2729
வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. |
8 |
2730
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. |
9 |
2731
தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. |
10 |
8.3 சுந்தரக் கூத்து |
2732
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்
கண்டம் கரியான் கருணை திருவுருக்
கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. |
11 |
2733
கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
நடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும்
திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை
வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. |
12 |
2734
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. |
13 |
2735
அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. |
14 |
2736
ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என்நாதனே. |
15 |
2737
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. |
16 |
2738
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. |
17 |
8.4 பொற்பதிக் கூத்து |
2739
தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. |
18 |
2740
அடிஆர் பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். |
19 |
2741
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. |
20 |
2742
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. |
21 |
2743
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. |
22 |
2744
விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. |
23 |
2745
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. |
24 |
2746
காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. |
25 |
2747
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. |
26 |
2748
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. |
27 |
8.5 பொற்றில்லைக் கூத்து |
2749
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. |
28 |
2750
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. |
29 |
2751
ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. |
30 |
2752
கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. |
31 |
2753
மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. |
32 |
2754
இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. |
33 |
2755
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே. |
34 |
2756
நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே. |
35 |
2757
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. |
36 |
2758
ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. |
37 |
2759
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. |
38 |
2760
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. |
39 |
2761
இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. |
40 |
8.6 அற்புதக் கூத்து |
2762
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவுரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே. |
41 |
2763
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே
உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே. |
42 |
2764
நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடந்திரு அம்பலந் தானே. |
43 |
2765
வளிமேகம் மின்வில்லு வானகஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. |
44 |
2766
தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. |
45 |
2767
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. |
46 |
2768
இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. |
47 |
2769
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. |
48 |
2770
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. |
49 |
2771
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. |
50 |
2772
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாமே. |
51 |
2773
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. |
52 |
2774
ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. |
53 |
2775
அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே. |
54 |
2776
கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. |
55 |
2777
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. |
56 |
2778
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. |
57 |
2779
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. |
58 |
2780
அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்
தங்குஉ பயந்தரு நீல மும்உடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. |
59 |
2781
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அகந் தானே. |
60 |
2782
ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
61 |
2783
ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. |
62 |
2784
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. |
63 |
2785
தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே. |
64 |
2786
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. |
65 |
2787
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. |
66 |
2788
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. |
67 |
2789
தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
68 |
2790
இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. |
69 |
2791
சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. |
70 |
2792
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமம் சிவநாட மாமே. |
71 |
2793
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. |
72 |
2794
கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள்
வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்
தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. |
73 |
2795
நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றோடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. |
74 |
2796
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. |
75 |
2797
திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்
திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. |
76 |
2798
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே. |
77 |
2799
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. |
78 |
2800
தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்
பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. |
79 |
2801
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. |
80 |
2802
சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே. |
81 |
2803
தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே. |
82 |
17. சூனிய சம்பாவணை |
2866
காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான்இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. |
1 |
2867
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. |
2 |
2868
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. |
3 |
2869
வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே. |
4 |
2870
ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. |
5 |
2871
பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. |
6 |
2872
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்
நாஅணைகோலி நடுவில் செறுஉழார்
காலணை கோலிக்களர்உழு வாரே. |
7 |
2873
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. |
8 |
2874
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. |
9 |
2875
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. |
10 |
2876
தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. |
11 |
2877
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. |
12 |
2878
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. |
13 |
2879
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. |
14 |
2880
களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. |
15 |
2881
கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. |
16 |
2882
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. |
17 |
2883
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. |
18 |
2884
ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. |
19 |
2885
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே. |
20 |
2886
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. |
21 |
2887
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. |
22 |
2888
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. |
23 |
2889
இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே. |
24 |
2890
ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே. |
25 |
2891
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. |
26 |
2892
குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. |
27 |
2893
காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி
கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவனை யாமே. |
28 |
2894
கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. |
29 |
2895
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. |
30 |
2896
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. |
31 |
2897
கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்
சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற
பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. |
32 |
2898
இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. |
33 |
2899
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. |
34 |
2900
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. |
35 |
2901
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. |
36 |
2902
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்
கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. |
37 |
2903
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. |
38 |
2904
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. |
39 |
2905
ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே. |
40 |
2906
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. |
41 |
2907
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே. |
42 |
2908
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. |
43 |
2909
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. |
44 |
2910
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போலாமே. |
45 |
2911
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே. |
46 |
2912
கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. |
47 |
2913
உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி
தழுவி வினைசெய்து தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே. |
48 |
2914
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. |
49 |
2915
தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. |
50 |
2916
முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. |
51 |
2917
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. |
52 |
2918
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. |
53 |
2919
மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. |
54 |
2920
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. |
55 |
2921
கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. |
56 |
2922
வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. |
57 |
2923
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. |
58 |
2924
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. |
59 |
2925
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. |
60 |
2926
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. |
61 |
2927
பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. |
62 |
2928
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. |
63 |
2929
வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே. |
64 |
2930
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. |
65 |
2931
போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. |
66 |
2932
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. |
67 |
2933
தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. |
68 |
2934
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. |
69 |
2935
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே. |
70 |
18. மோன சமாதி |
2936
நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. |
1 |
2937
காட்டும் குறியும் கடந்த அக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. |
2 |
2938
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. |
3 |
2939
மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. |
4 |
2940
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. |
5 |
2941
உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. |
6 |
2942
கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறையறி யோமே. |
7 |
2943
தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. |
8 |
2944
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. |
9 |
2945
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே. |
10 |
2946
கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே. |
11 |
2947
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. |
12 |
2948
விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. |
13 |
2949
வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே. |
14 |
2950
அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. |
15 |
2951
தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே. |
16 |
2952
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. |
17 |
2953
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. |
18 |
20. அணைந்தோர் தன்மை |
2957
மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. |
1 |
2958
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. |
2 |
2959
ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. |
3 |
2960
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. |
4 |
2961
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. |
5 |
2962
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. |
6 |
2963
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. |
7 |
2964
பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. |
8 |
2965
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. |
9 |
2966
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. |
10 |
2967
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே. |
11 |
2968
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான் எதிராரே. |
12 |
2969
சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. |
13 |
2970
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. |
14 |
2971
சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. |
15 |
2972
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. |
16 |
2973
என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. |
17 |
2974
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. |
18 |
2975
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. |
19 |
2976
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. |
20 |
2977
உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. |
21 |
2978
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே. |
22 |
2979
ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. |
23 |
2980
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. |
24 |
2981
மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. |
25 |
21. தோத்திரம் |
2982
மாயனை நாடி மனநெடும் தேரெறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்
காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. |
1 |
2983
மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே. |
2 |
2984
முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே. |
3 |
2985
புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. |
4 |
2986
பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. |
5 |
2987
நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. |
6 |
2988
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. |
7 |
2989
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. |
8 |
2990
வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. |
9 |
2991
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. |
10 |
2992
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. |
11 |
2993
அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. |
12 |
2994
வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. |
13 |
2995
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. |
14 |
2996
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. |
15 |
2997
வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. |
16 |
2998
விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. |
17 |
2999
மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே. |
18 |
3000
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. |
19 |
3001
உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பிரானே. |
20 |
3002
பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்
பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. |
21 |
3003
அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்கும் தானே பாராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே. |
22 |
3004
முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்
அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. |
23 |
3005
ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. |
24 |
3006
அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. |
25 |
3007
உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம்முழு பொன்னிற மாகிநின் றானே. |
26 |
3008
பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே. |
27 |
3009
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே. |
28 |
3010
திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்
மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. |
29 |
3011
அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி
இவன்தான் எனநின்று எளயனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனு மாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. |
30 |
3012
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. |
31 |
3013
படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. |
32 |
3014
ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவி நின் றானே. |
33 |
3015
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை
நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. |
34 |
3016
உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே. |
35 |
3017
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. |
36 |
3018
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே. |
37 |
3019
உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. |
38 |
3020
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே. |
39 |
3021
இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே. |
40 |
3022
உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. |
41 |
3023
தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே. |
42 |
3024
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே. |
43 |
3025
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. |
44 |
22. சர்வ வியாபி |
3026
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதுஎய்தும்
சாயும் தனது வியாபகம் தானே. |
1 |
3027
நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை
நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே. |
2 |
3028
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. |
3 |
3029
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. |
4 |
3030
உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. |
5 |
3031
பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு
மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே. |
6 |
3032
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்
ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. |
7 |
3033
நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரல் லானே. |
8 |
3034
செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி
ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. |
9 |
3035
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலனும் அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. |
10 |
3036
புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே. |
11 |
3037
விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. |
12 |
3038
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே. |
13 |
3039
புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே. |
14 |
3040
உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. |
15 |
3041
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. |
16 |
3042
இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. |
17 |
3043
பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. |
18 |
3044
அதுஅறி வானவன் ஆதிப் புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. |
19 |
3045
நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே. |
20 |
3046
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. |
21 |